போர் புகைப்படம்: பணிந்தது பேஸ்புக்

வியட்நாம் போர்க்கொடூர புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் நிர்வாகம்,  நார்வே நாட்டின் எதிர்ப்பால் பணிந்தது.

வியட்நாம் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, கொத்து குண்டுகளை வீசியது. அதிலிருந்து தப்பிக்க சிம்பக் என்ற ஒன்பது வயது சிறுமி நிர்வாணமாக ஓடிய புகைப்படம், உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறது.

இந்த புகைப்படத்தை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படகலைஞர் நிக் உட் காங் ஹுன் ‘அசோசியட் பிரஸ்’ நிறுவனத்துக்காக படம் பிடித்தார். இந்த புகைப்படத்துக்கு, மிக உயரிய புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது.

இந்த புகைப்படத்தை நார்வே நாட்டு எழுத்தாளர் சேர்ந்த  டாம் ஈக்லான்ட் என்பவர்,  போரின் புகைப்படங்கள் என்ற தலைப்பில்  பேஸ்புக்கில் தனது பக்கத்தில் பதிந்தார். போரின் கொடுமையை விளக்கும் அந்த படத்தை, சிறுமியை ஆபாசமாக சித்தரிப்பதாக கருதி நீக்கியது பேஸ்புக் நிர்வாகம். மேலும், இந்த புகைப்படத்தை வெளியீடும் அனைவரின் கணக்கில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் கடந்த சில நாட்களாக புகைப்படத்தை நீக்கத் தொடங்கியது. சிலரின் கணக்கையும் முடக்கியது.

0

வரலாற்று முக்கியத்துவம் , போரின் கொடூரத்தை உணர்த்தும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமியின் நிர்வாணம், ஆபாசம் அல்ல என்ற கோணத்தில் பார்க்க கூடாது என பேஸ்புக் நிறுவனத்துக்கு நார்வே நாட்டு மக்களும் புகைப்படத்தை வெளியிட்ட டாம் ஈக்லாண்டின் ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நார்வே நாட்டின் பிரதமர் எர்ணா சோல்பெர்க்கும் இதே படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதையும் பேஸ்புக் நிர்வாகம் நீக்கியது. கருத்து சுதந்திரத்தை பேஸ்புக் நிர்வாகம் நசுக்குகிறது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து உலகளாவிய அளவில்,  பேஸ்புக் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

நார்வே நாட்டில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய நாளேடான ஆப்டன் போஸ்ட் தனது முதல் பக்கத்தில் பேஸ்புக்கின் லோகோ, நிறுவனர் ஜூகர்பெர்க் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறார் என செய்தி வெளியிட்டது.

 

இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் ஒருவாரத்துக்கு பின், மீண்டும் அந்த புகைப்படத்தை திருத்தமின்றி பிரசுரம் செய்வதாக தெரிவித்து  வருத்தம் தெரிவித்துள்ளது.

 

“நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் புகைப்படம். சிலநாடுகளில் இது அபாசமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த விசயத்தில், வரலாற்று மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கருதி இந்த புகைப்படத்தை வெளியிடுகிறோம்” என தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் முடிவை வரவேற்ற நார்வே பிரதமர் மகிழ்ச்சி  தெரிவித்தார். மேலும், “ சமூக வலைதளங்களின் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்றும் கூறியுள்ளார்.