இஸ்லாமாபாத்:

ன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்குள் புகுந்து, பயங்கர வாத முகாம்களை அழித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிராஜ் ரக விமானங்கள்  நடத்திய அதிரடி  தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத  அமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டபயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களின் முகாம்களை அடியோடு தகர்த்தெறியப்பட்டதாகவும்  தகவல் வெளியானது.

இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்தியாவின் தாக்குதல் குறித்து தோழமை நாடுகளிடம் கண்டனத்தைப் பதிவு செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கியமான ரகசிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியா மீது பாகிஸ்தானும் அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  விமானப்படை உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.