சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கல்லூரி விடுதிகள் கொரோனா வார்டாக மீண்டும் மாற்றும்பணி தொடங்கி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், சென்னையிலும் நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் காரணமாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களினாலும், மக்கள் மாஸ்க் அணியாமல் மெத்தனத்துடன் நடந்துகொண்டதாலும்தான்  தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பியதால், கல்லூரிகளில் உள்ள மாணவர்கள்  விடுதியை மீண்டும் கொரோனா வார்டாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை  கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என எச்சரித்தார்.

சென்னையில் மட்டும் கொரோனா படுக்கைகள்   18,852 படுக்கைகள் உள்ளதாக  கூறியவர், சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இந்திய அளவில் ஒப்பிடுகையில் வெறும்   3%  மட்டுமே என்றவர்,  மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், என்றும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.