சூரியபேட், தெலுங்கானா

மாணவர்களின் படுக்கைக்கு அடியில் தேர்வு வினாத்தாள் என பொய் சொல்லி கஞ்சாவை பதுக்கி வைத்து விட்டு விடுதி வார்டன் தலைமறைவாகி உள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சூரியபேட் என்னும் இடத்தில் காயத்ரி ஜூனியர் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரி உள்ளது.    இங்குள்ள மாணவர்கள் விடுதியின்  வார்டன் சில மூட்டைகளை மாணவர்களின் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.   மேலும் அதில் தேர்வு வினாத்தாட்கள் உள்ளதால் யாரும் பிரிக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.

ஆனால் சில மாணவர்கள் தேர்வு வினாக்களை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் வார்டனுக்கு தெரியாமல் அந்த மூட்டைகளை பிரித்துள்ளனர்.    ஆனால் வினாத்தாளுக்கு பதில் தழைகள் உள்ளதைக் கண்டுள்ளனர்.    இந்த தழையின் அடியில் கேள்வித் தாட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என முழுக்கத் தேடி உள்ளனர்.    இலையை முகர்ந்ததில் அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

அதனால் அவர்கள் கல்லூரி முதல்வரிடம் இலைகளைக் காட்டி உள்ளனர்.  முதல்வர் காவல்துறைக்கு தகவல் அளித்து அவர்கள் அதை சோதித்ததில் அது கஞ்சா என தெரிய வந்துள்ளது.   மொத்தம் 100 கிலோ கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது.   வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.     விவரம் அறிந்த வார்டன் தலைமறைவாகி விட்டார்.    காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.