லண்டன்: ஆஸ்தி‍‍ரேலிய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது, டேவிட் வார்னர் அடித்தப் பந்து, வலைப் பந்துவீச்சாளரின் தலையில் தாக்கியதால் பயிற்சி நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் 9ம் தேதி இந்தியாவுடன் மோதும் போட்டிக்காக, ஆஸ்திரேலிய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, டேவிட் வார்னருக்கு பந்து வீசிய வலைப் பந்துவீச்சாளரின் தலையில், வார்னர் அடித்தப் பந்து தாக்கியது.

இதனையடுத்து, அப்படியே மைதானத்தில் சாய்ந்தார் அந்தப் பந்து வீச்சாளர். இதனைப் பார்த்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த இதர ஆஸ்திரேலிய வீரர்களும் தங்களின் பயிற்சியை நிறுத்தி அங்கே குழுமினர்.

காயம்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சுயநினைவோடு இருந்தாலும், தலையில் அடிபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் டேவிட் வார்னர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை தான் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு எதிராகவும் தனது வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.