சென்னை:

க்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்கவும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துகொள்வது நன்மை பயக்கும்.

அக்னி நட்சத்திர காலம் வந்து விட்டால், வெயிலின் தாக்கம் பயங்கரமாக இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு பயந்து மக்கள்  வீட்டை விட்டு வெளியே வர தயங்குவார்கள்.

சித்திரை மாதம், பரணி 4ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சாரிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என 2 பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். சித்திரை கடைசி வாரம் தொடங்கி, வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைக்கிறது.  சித்திரை மாதம் 21-ம் தேதி தொடங்கி, வைகாசி 14-ம் நாள் முடிவடைகிறது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்க உள்ளது.  இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம்  26 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் பயங்கரமாக இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலானது நாளுக்கு நாள்  அதிகமாகி கொண்டே 21-வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது.இந்த ஆண்டு அதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வெயிலே பல மாவட்டங்களில் 107 டிகிரி வரை எட்டியுள்ளது.

இதற்கிடையில்,  குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வெளி மண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அவ்வப்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து  வெப்பத்தை தணித்து வருகிறது. இருந்தாலும், அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னி நட்சத்திரத்தின்போது தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்…

செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது,  விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது.

வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது. முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.