மேட்ரிட்: பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக, உலக நாடுகளுக்கு ஐ.நா. சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மன்றத்தின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்பெயின் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகின் பல நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருதல், அதை வலுப்படுத்தல், உலகம் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தல், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தீவிரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில், உலகளவில் பருவநிலை மாற்றத்திற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் எனவும், பல கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் எனவும், அந்தமான் நிகோபர் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற தீவுகளாக மாறும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.