ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்…

ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களோ, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களோ… தாங்கள் ஏதோ வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதுபோல அங்கலாய்த்து வருகின்றனர்… பலர் தங்களது கைகளில் உள்ள முத்திரையை மறைத்து கிளவுஸ் அணிந்துகொண்டு, வீடுகளில் இருந்து வெளியேறி ஊர் சுற்றி வருகின்றனர்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவியது… இங்கு வாழ்ந்து வரும் மக்கள் மூலமாகவா பரவியது…

பண ஆசையில் வெளிநாடுகளுக்கு சம்பாதிக்க சென்றவர்கள், தற்போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தாய் நாட்டுக்கு ஓடிவந்தவர்களால்தானே…

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், அங்கிருந்தால் தங்களது உயிர் பறிபோகும் என்று பயந்து, உயிரைக் காப்பாற்ற தாயகத்துக்கு ஓடோடி வந்தவர்களாலும், பல நாடுகள், வெளிநாட்டவர்களை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டதாலும், தங்களை அழைத்துச்செல்லுங்கள் என்று கூப்பாடு போட்டதாலும், மத்தியஅரசு மனிதாபிமான நோக்கில், சிறப்பு விமானங்களை அனுப்பி அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவர்களிடம் தெர்மல் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்த அறிவுறுத்தியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகளில் இருந்து சுமார் 15 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களால்தான் கொரோனா பரவியது என்பது 100% உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 96ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்  மூலம் கொரோனா தொற்று, மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், பாதுகாப்பு கருதியும், இவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இவர்களுக்கு தேவையான வசதிகள், மருந்து மாத்திரைகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. உணவு உள்பட தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இவ்வாறு பல முன்னேற்பாடுகள் செய்தாலும், பலர் அரசின் அறிவுறுத்தலை மீறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், நோய் தாக்கம் அறிகுறி இருப்பவர்கள், முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளகூடியதே.

இது சுய பாதுகாப்பிற்கும், உங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி அண்டை வீட்டார்கள், அடுத்தவர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து 14 நாட்கள் தனிமையில் இருந்து தங்களை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியம்…

இதை அவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்… ஆனால், அவர்கள் அதை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறார்கள்…

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அரசின் அறிவுறுத்தலை மீறி, செயல்பட்டதாலேயே, அரசு,  அவர்களின் கைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற முத்திரையை குத்தி, மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்…

ஆனால், இவர்களோ, அரசின் நடவடிக்கை தங்களுக்கு  மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.. என்று புலம்புகின்றனர்… தங்கள்மீது பொதுமக்களிடையே தவறான கருத்துக்கள் சித்தரிக்கப்படுவதாக  வேதனை தெரிவிகின்றனர்.

இவர்களின் வேதனை உண்மைதான், இருந்தாலும் தற்போதைய சூழலில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியமே…

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று நோயாளி உருவான கேரள மாநிலத்தில்,  வெளிநாட்டில் இருந்து திரும்பிய பலர், தங்களின் சுயவிவரங்களை அரசிடம் தெரிவிக்காத நிலையில்தான் அங்கு கொரோனாவின் தாக்கம் இன்றுவரை  அதிகரித்து வருகிறது…

கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கவே மத்தியஅரசு 21நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை எச்சரிகையுடன் வீடுகளிலேயே இருக்க வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவின் இதயங்களான கிராமப்புறங்களில், அரசின் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு, ஊரைச்சுற்றி கிருமிநாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்து, தங்களையும், தங்களது பகுதிகளையும் பாதுகாத்து வருகின்றனர்…

ஆனால், அதிகம் படித்தவர்கள் வாழும் மாநகரங்களிலும், நகரப்பகுதி மக்களும்தான் அரசின் எச்சரிக்கையும், அறிவுரையையும்  ஏற்க மறுத்து, ஊர் சுற்றி வருகிறார்கள்..

அதுபோல தனிமைப்படுத்துதல் முத்திரை குத்தப்பட்டவர்களும், தங்களது முத்திரைகளை மறைத்து,  கைகளில் கிளவுஸ் அணிந்துகொண்டு, அவ்வப்போது வீடுகளைவிட்டு வெளியே வந்து செல்கிறார்கள்…

வட மாநிலங்களின் சில பகுதிகளில், முத்திரை குத்தப்பட்ட நபர்கள் வெளியில் நடமாடிய நிலையில், அவர்கள் பொதுமக்களின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பொது இடத்தில் தும்மிய நபருக்கு அடி உதை,  கொரோனா அறிகுறி முத்திரையுடன் வெளியே சுற்றிய தம்பதிகள் ஓட ஓட விரட்டப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன..

இதுபோன்ற ஒரு நிலை தமிழகத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது…

மக்களின் நலனை கருத்தி தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு  தனிமையில் இருந்து, உங்கள் வீட்டாளர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களின் சுகாதாரத்திலும் அக்கறை செலுத்துங்கள்…

இல்லை, எங்களால் வீட்டிலேயே இருக்க முடியாது என்று நினைத்து, வெளியில் சுற்றினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்…

அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமல் செயல்படும் இவர்களுக்கு அரசின் சலுகைகள் ஏன் வழங்கப்பட வேண்டும்…

நாட்டு மக்களின் நன்மைக்காக சில நாட்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள், உண்மையிலேய வாழத் தகுதியற்றவர்கள்…

தற்போது பலர் சீனாவை கைகாட்டுகிறார்கள். அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து வெளியே வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள்… ஆனால், அதற்காக அந்நாட்டு மக்கள் அனுபவித்த வேதனை தெரியுமா?

சீனாவின் வுகான் மாகாணம் 32 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு ஈ எறும்புகூட வீட்டை விட்டு வெளியேவும் வர முடியாது, உள்ளேயும் செல்ல முடியாது…

அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன… அரசின் உத்தரவை மீறினால் அங்கு நடப்பது என்ன? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்..

கொரோனா பரவலை தடுக்க  தமிழகஅரசும், காவல்துறையும் ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும்…

காவல்துறையினர் வீதிகள்தோறும் அடிக்கடி சுற்றி வந்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாதவாறு கண்காணிக்க வேண்டும்…

மக்கள் உரிமைக்கழகம், கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்களின் வெட்டித்தனமான மிரட்டலை கவனத்தில் எடுக்காமல், மக்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்…

இல்லையேல், தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்… மக்கள் நெரிசல் மிக்க மாநகரங்களிலும், வடசென்னை பகுதிகள் மற்றும் குடிசைப்பகுதிகள் நிறைந்துள்ள பகுதிகளிலும், மக்கள் சுயமாக ஊரடங்களை பின்பற்றத் தவறினால்…

கொத்துக்கொத்தாக தமிழக மக்கள் மரணிப்பதை தடுப்பது சாத்தியமற்றதே

எச்சரிக்கை…