பெர்லின்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை உலகளவில் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளது.
கொரோனா பரவலை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஊரடங்கை சற்று தளர்த்தியவுடன் தொற்று அதிகரித்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், வேறொரு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் அந்நாட்டு அதிபர். அந்நாட்டில், ஜனநாயகக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில் அரசியல் ஆதாயத்திற்காக ஊரடங்கு நடைமுறை மிகவும் மெதுவாக தளர்த்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை, அங்கு பாதிக்கப்பட்ட ஒரு நபர், 1.1 பேருக்கு கொரோனா தொற்றுவதற்கு காரணமாகிறார் என்று வெளியாகியுள்ள தகவல், உலகின் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் உத்தேசிக்கப்படும் ஊரடங்கு தளர்வு குறித்து புதிய அச்சத்தைக் கிளப்பியுள்ளது.
அது, பாரிஸ் நகரின் சலூன்களாக இருந்தாலும் சரி, ஷாங்காய் நகரின் டிஸ்னிலேண்ட் பூங்காவாக இருந்தாலும் சரி. பரவும் விகிதம் 1 என்பதற்கு மேல் இருக்கிறது எனும்போது, வைரஸ் மிக வேகமாக பரவுவதை அறிய முடிகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த அச்சமானது, உலகளவில் பங்குச் சந்தை விலைகள் மற்றும் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சியை இன்னும் அதிகரிக்கிறது.