சென்னை,

புதுச்சேரி பல்கலைக்கழகப் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்  பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஆகவே பாதுகாப்பு  ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாணவர் வினோத் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும்,  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முழுநேர துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன் காரணமாக  பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களில் ஒரு பிரிவினர் குழுவாக இணைந்து, மற்றொரு தரப்பினரோடு தகராறில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுபோன்ற மோதல் காரணமாக  கடந்த 2015-ல் நடந்த மோதலின்போழ  பல்கலைக்கழகச் சொத்துகள் சேதமடைந்தன. மேலும், மாணவர்களையும் போராட்டத்துக்கு அழைத்தனர்.  இதுபோன்ற காரணங்களால் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ந்தேதி நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது  தொடர்பாக புதுச்சேரி மாநில டி.ஜி.பி 7ந்தேதி அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேடும் என  உத்தரவிட்டிருந்தார்.

இந்த  வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  புதுச்சேரி டி.ஜி.பி. ஆஜராகவில்லை.

இதையடுத்து, விசாரணையை வரும் 15ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்று டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை என்றால்  ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.