ஃபிளிப் மொபைலிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு மாறிய வாரன் பபெட்

உலகின் முதல்நிலை பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட் தனது சாம்சங் ஹேவன் ஃபிளிப் (புரட்டும் மாடல்) மொபைலிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு மாறிவிட்டதாக கூறினார்.

சமீபத்தில் அவர் சிஎன்பிசி-க்கு அளித்த பேட்டியில் 2019 வரை தான் ஃபிளிப் மொபைலை தான் பயன்படுத்தி வந்தாதாகவும், தற்பொழுது ஐபோன் 11 மாடல் மொபைலை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதில் ஒரு வேடிக்கையென்னவென்றால், வாரன் பபெட் ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தில் 5.6 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார் என்பது தான், உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தபோதும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இருப்பவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே, தற்போது வரை ஒமாஹா நகரத்தில் 1958 ம் ஆண்டு வாங்கிய வீட்டில் தான் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பபெட், சி.என்.பி.சி யிடம் தான் எந்தஒரு ஐபோனையும் வாங்கவில்லை என்றும், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உட்பட பலரால் தனக்கு பரிசளிக்கப்பட்ட ஐபோனில் ஒன்றைத்தான் பயன்படுத்துவதாக கூறினார், இருப்பினும் ஐபோன் 11 ல் எந்த மாடலை சேர்ந்தது என்று குறிப்பிடவில்லை.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், கடந்த 2018 ம் ஆண்டு தனது பேட்டியொன்றில், “தான் வாரன் பபெட்-ஐ ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு மாற்ற முயற்சிப்பதாகவும், அவ்வாறு அவர் செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட முறையில் ஒமாஹாவுக்கு பறந்து சென்று பபெட்டுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவைச் செய்வேன்” என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.

நீண்டகாலத்திற்கு பின் பபெட் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கியிருந்தாலும், அதனை தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவும், அழைக்கவும் மட்டுமே பயன்படுத்துவதாகவும், தொழில் சம்பந்தமான ஆய்வுகளையும், பங்குசந்தை நிலவரங்களையும் தெரிந்துகொள்ள ஐபாட் ஒன்று வைத்திருப்பதாகவும் கூறி ஆச்சர்யப்படவைத்தார்.

மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் உலகின் பெரும் பணக்காரர் சமீபத்தில் தான் ஐபோன் க்கு மாறியிருப்பதை கேட்கும் போது அவரின் எளிமையை கண்டு மிகவும் வியப்பாக உள்ளது.