சென்னை:

மிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அதை திறந்துவைத்து பேசினார்.

அப்போது தானியங்கி மின்தடை நீக்கும்  மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,  இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது, மின் தடை ஏற்படும் பகுதிகளை  தானாகவே கண்டித்து பழுது நீக்கப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குடி மராமத்து பணி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.