திருச்செந்தூர்:
சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும், ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததால்,  காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தந்தை மகன் இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள், உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவின்படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர்,  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அன்றைய தினம் பதிவான காட்சிகள் இல்லை என்பது தெரிய வந்தது.  காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிராக்களின் காட்சகிள்  தினமும் அழியும்படி கடந்த பிப்ரவரி மாதமே மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
 ஆனால் காவல்துறை விதிகளின் படி குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு காட்சிகளை அழிக்கக் கூடாது என சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அழிவதற்கு  யார் காரணம் எனக் கேள்வி எழுந்த நிலையில், அழியும் வகையில் செட் செய்தது யார் என்பது மர்மமாகவே உள்ளது.
அந்த காவல் நிலையத்தில் தொழில்நுட்பப் பிரிவு காவலர்கள் பணி காலியாக உள்ள நிலையில்,  சம்பவத்தன்று அதை  பராமரித்து வந்த காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது,  சிசிடிவி காட்சிகளின் அமைப்புகளை தங்களால் மாற்ற இயலாது எனவாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படியானால் சிசிடிவி காட்சிகள் அழிந்தது எப்படி? அதை அழித்தது யார்?  வேண்டுமென்றே சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.  இதைத் தொடர்ந்து, அழிந்த சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.