சென்னை:  வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  ஜனவரி இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த  கட்டமாக வண்ணாரப்பேட்டை– திருவொற்றியூர்  விம்கோ நகர் இடையே முதல்கட்ட மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டப் பணிகள் ரூ.3,700 கோடியில் நடைபெற்றன.  இந்த மெட்ரோ ரெயில் பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரெயில் பணிகள்  மீண்டும் வேகமெடுத்தன.  இந்த நிலையில், அந்த வழித்தடத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு  டீசல் என்ஜினை இயக்கப்பட்டு,  தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த பாதையில் நேற்று மெட்ரோ ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர்.

இதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் புறப்பட்ட சோதனை ஓட்ட மெட்ரோ ரெயில் என்ஜினில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ், இயக்குனர்கள் (திட்டங்கள்) ராஜீவ் நாராயணன் திவேதி, (அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள்) ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயிலை நிறுத்தியும், தொடர்ந்து இயக்கியும் சோதனை செய்தனர். இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து கூறிய  சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள்,  வண்ணாரப்பேட்டை–திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள 2 பாதைகளிலும் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தினோம். இதில் சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு தயார் நிலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. தற்போது ஒரு சில உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்களில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஜனவரி முதல் வாரம் வரை இந்த பாதையில் மெட்ரோ ரெயிலை தினசரி இயக்கி சோதனை நடத்தப்படும். அதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிய வந்தால் நிவர்த்தி செய்யப்படும்.

இதனால் திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு சராசரியாக ஒரு மணி நேரத்தில் ஒரே ரெயிலில் சென்றுவிட முடியும். இதன் மூலம் கோயம்பேடு, விமான நிலையம், எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களும் வடசென்னையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.