பாகிஸ்தான் பந்துவீச்சு நட்சத்திரம் வாசிம் அக்ரம், இன்று தனது 55வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 916 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் இவர்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டிலும், தனித்தனியாக 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய உலகின் 2 பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் இவர்! மற்றொருவர் இலங்கையின் முத்தையா முரளிதரன்.

இவருக்கு ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்ற ஒரு புகழ்பெற்ற அடைமொழி உண்டு! கடந்த 1984ம் ஆண்டு தனது 18வது வயதில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற இவர், 1992ம் ஆண்டு அந்த அணி, உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். அப்போட்டியில், 33 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தும்கூட, சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர். இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலா 2 என்று, மொத்தம் 4 ஹாட்ரிக் சாதனைகளைப் படைத்தவர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 502 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில், லெஃப்ட் ஆர்ம் பந்துவீச்சாளர்களில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான்! ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட லெஃப்ட் ஆர்ம் பந்துவீச்சாளரும் இவரே!

டெஸ்ட் போட்டி ஒன்றில், 8வது வீரராக களமிறங்கி, 22 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன், 257 ரன்கள் எடுத்து, நாட்-அவுட்டாக இருந்த சாதனையாளரும் இவர்தான்!

இவரின் பவுலிங் உடல்மொழியால் கவரப்பட்ட ரசிகர்கள் பலர்..!

இவரின் பிறந்தநாளில் பத்திரிகை.காம் சார்பாக வாழ்த்துகிறோம்!