அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – அறிவித்தார் ரஞ்சிப் போட்டி புகழ் வாசிம் ஜாஃபர்!

மும்பை: இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், புகழ்பெற்ற ரஞ்சிப் போட்டிகள் நாயகனுமான வாசிம் ஜாஃபர், அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் ரஞ்சிக்கோப்பையில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடந்த 1996ம் ஆண்டில், ரஞ்சிக்காக மும்பை அணியில் ஆடத் தொடங்கிய இவர், பின்னர் விதர்பா அணிக்கு இடம் பெயர்ந்தார்.

இவர் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் ரஞ்சிப் போட்டிகளில் மொத்தம் 1037 ரன்களைக் குவித்தார். மொத்தம் 260 முதல்தர போட்டிகளை ஆடியுள்ள ஜாஃபர், மொத்தம் 19410 ரன்களை அடித்துள்ளார்.

இவரது கணக்கில் 57 சதங்கள் மற்றும் 91 அரைசதங்கள் அடக்கம். இவரின் உயர்ந்தபட்ச ரஞ்சி ரன் 314.

இந்தியாவுக்காக, கடந்த 2000 முதல் 2008 வரையிலான காலகட்டங்களில், மொத்தம் 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 1944 ரன்களை அடித்துள்ளார். அவற்றில், 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடக்கம்.

இவரின் அதிகபட்ச டெஸ்ட் ரன் 212. மேலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார்.

You may have missed