சென்னை:

மிழக நிதி அமைச்சர் இன்று  தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ‘உதவாக்கரை பட்ஜெட்’  என்றும், இது தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று 2019-20ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

காலை 10 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கிய ஓபிஎஸ் 12.40 வரை சுமார் 2 மணி 40 நிமிடங்கள்  உரையாற்றினார்  பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,  இந்த பட்ஜெட், ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்றும்., ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. ஏதோ சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ்  என்று கூறிய ஸ்டாலின்,  இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல – வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சித்தார்.

சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ள நிலையில்,  வருவாயை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், இது  பொருளாதாரத்தில் அரசின் தோல்வியையே பட்ஜெட் காட்டுகிறது என்றார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாததால்  தமிழகம் சீரழியும் நிலையில் இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு முன் வரவில்லை. உள்ளாட்சிக்கான நிதியை மத்திய அரசு வழங்காததற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே காரணம்.  திவாலான கம்பெனியைப் போன்ற சித்திரத்தையே பட்ஜெட் வழங்குகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியவர், தமிழகத்தில் ஒருகோடி போர் வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறினார்.

விவசாயிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. வாங்கிய  கடனுக்கான வட்டியை செலுத்தக்கூடிய வகையில் பட்ஜெட் உள்ளது. விவசாயிகளுக்காகவும், அரசின் வருவாயை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்றும் குறை கூறினார்.

கொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில்தான் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.