திருப்பத்தூர் செம்மொழி பூங்காவுக்குள் கழிவுநீர்: பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூரில் செம்மொழி பூங்காவுக்குள் கழிவுநீர் திருப்பி விடப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செம்மொழி பூங்கா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சியும் செல்வார்கள். பெரும்பாலான மக்களின் பொழுது போக்கு அம்சமாக உள்ள இந்த பூங்காவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியும் உள்ளது.

இந்த தொட்டியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் நிரம்பி இருப்பது, பூங்காவுக்கு வருபவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அண்ணா சாலையில் தற்காலிகமாக செயல்படும் பஸ் நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தின் கழிவுநீர், பூங்காவுக்குள் திருப்பி விடப்பட்டிருப்பது தான் இந்த அவலத்திற்கு காரணம். சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து செல்லும் பூங்காவில் கழிவுநீர் வருவதால் பலருக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may have missed