சென்னை:

சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த கழிவறைகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, பல இடங்களுக்கு பூமிக்கு அடியில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இங்குள்ள ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளின் வசதிக்காக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளதாக ரயில்கள் பயணிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், `தண்ணீர் பிரச்னை காரணமாக கழிவறை மூடப்பட்டுள்ளது’ என்ற வாசகம் அடங்கிய பிட் நோட்டீஸ் ரயில் நிலைய அதிகாரிகளால் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல சென்னையில் பல பள்ளிகள்  சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. . குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி அரை நாள் மட்டுமே செயல்பட உள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24 ம் தேதிக்கு பிறகு முழு நேரம் பள்ளி செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.