பாகிஸ்தானுக்கு அனுப்பிய 3 நதிகளின் நீர் யமுனை ஆற்றில் இணைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி:

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் 3 நதிகள், யமுனை ஆற்றில் திருப்பி விடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.


புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான உறவுகளை துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
மிகவும் நெருங்கிய நாடு என்ற பட்டியலில் இருந்து பாகிஸ்தானை இந்தியா அகற்றியுள்ளது.  கலாச்சார நிகழ்ச்சிகள், கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானை இந்தியா ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய நீர்ப்பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து 3 நதி நீர் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்தது.  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்த 3 நதிகளையும் யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி, ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ல் இது போன்ற தாக்குதல் நடந்தபோதே, இந்த நதிகளை பாகிஸ்தானுக்கு செல்வதை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 3 நதிகளையும் யமுனை ஆற்றில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, நீர்ப்பாசனத்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் நீட்டா பிரசாத் தனது ட்வீட் செய்தியில், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வரும் நதி நீரின் நமது பங்கைத் தான் நிறுத்த முடிவு செய்துள்ளோம்.  இது இப்போது எடுத்த முடிவு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.