எரிவாயு சிலிண்டரில் தண்ணீர் கலப்படம் : அதிர்ச்சி தகவல்

தேனி

பெரியகுளம் பகுதியில் எரிவாயு சிலிண்டரில் பாதி அளவுக்கு தண்ணீர் இருந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் வீரம்மாள் என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு பாரத் கேஸ் நிறுவனம் எரிவாயு சிலிண்டர் ஒன்றை டெலிவரி செய்துள்ளது. வீரம்மாள் ஒரு சிலிண்டரை 45 நாட்கள் வரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் இந்த சிலிண்ட்ர் 15 நாட்களில் தீர்ந்துள்ளது.

அதனால் வீரம்மாள் தனது அடுப்பில் பிரச்சினை என சரி செய்துள்ளார். ஆனால் அதன் பிறகும் எரியாததால் வீரம்மாளும் அவர் குடும்பத்தினரும் வாயு வருகிறதா என சோதிக்க சிலிண்டரில் ஒரு கம்பியால் அழுத்தி உள்ளனர். அப்போது அந்த சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறி உள்ளது.

அதிர்ச்சி அடைந்த வீரம்மாளின் குடும்பத்தினர் இதுகுறித்து தேனி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆட்சியர் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். பால் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் நிகழ்ந்த கலப்படம் எரிவாயு வரை வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.