தீவிரமடையாத தென்மேற்கு பருவமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

--

தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததன் காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

தென் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கும் மழைப்பொழிவே பெரிதும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஜூன் 6ம் தேதி தெற்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. கேரளாவில் குறிப்பிட்ட நாளில் தொடங்கிய இந்த மழையின் தாக்கம் தேனி மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் உணரப்பட்டது. ஆனால் அதன்பின் மழை என்ற அறிகுறியே இல்லை. இதனால் பெரியாறு அணையின் நீரை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மழை தொடங்கியபோது 325 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதுபடிப்படியாக 243, 136, 100 என குறைந்து இன்று 7 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டமும் நேற்றை விட குறைந்து இன்று 112.20 அடியாக உள்ளது. இருந்தபோதும் அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1263 மி.கன அடியாக உள்ளது. இதனால் இந்த அணை நீரை நம்பி உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகப்பெரிய அபாயத்தை சந்திக்க சூழல் உருவாகியுள்ளது.