மகாராஷ்டிரா பாஜ அரசின் நிர்வாக திறமையின்மை: வெள்ளத்தில் மிதக்கிறது விதான்சபா

  மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சாலை முழுவதும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா பாஜ மாநில அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாகவே, மாநில சட்டமன்ற கட்டிடமான விதான் சபா வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது என்றும், மாநிலம் முழுவதும் சாலைகளில் தேங்கியுள்ள  வெள்ள நீரை அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில பாஜ முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா ஆதரவுடன் களமிறங்கிய பாஜக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து, முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவில் பதவி ஏற்றார். தற்போது அவரது தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது.  பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து மக்கள் நலத்திட்டப் பணிகள் நடைபெறாமல் ஊழல் மலிந்து வருகிறது.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள  மகாராஷ்டிரா சட்டமன்றம் அமைந்துள்ள விதான்சபா பகுதி

மும்பையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மும்பை நகரமே பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளது. இடைவிடாது பெய்த மழை, நகரை சாதாரணமாக விட்டு விடவில்லை. நீர் நிரம்பிய சாலைகள், கடும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், தீ அவசரங்கள், நீர் நிரம்பிய ரயில் பாதைகள், பெரும் பள்ளங்கள், சாலையில் வெளிவரும் சாக்கடை நீர்  என மும்பை நகரமே முடங்கிப் போயுள்ளது. மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.  மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற மாநில அரசு முயற்சி எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

வெள்ளத்தில் மிதக்கும் மகாராஷ்டிரா

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சட்டமன்றம் அமைந்துள்ள விதான் சபா பகுதி மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. மாநில சட்டமன்ற அலுவலகத்தின் தரைப்பகுதி முழுவதும் மழைநீர் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பணிகள் முடங்கி உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டு விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் மாநிலஅரசோ, இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது பொதுமக்களிடையே ஆளும் பாஜக அரசின் மீது  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசு செயலற்ற நிலையில் இருக்கும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் டப்பாவாலாக்கள் உணவு வசதி செய்து வருகின்றனர்.  இது மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

ஏழைகளுக்கு உணவளித்த டப்பாவாலாக்கள்

மும்பையில் பணிக்கு செல்வோருக்கு  உணவு எடுத்துச்சென்று வழங்கி வருவதில் பெரும் உதவி யாக இருப்பது டப்பாவாலாக்கள்தான். இவர்கள் தற்போது  கனமழை மற்றும் போக்குவரத்து பிரச்சனையால் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

மழை காரணமாக உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு டப்பாவாலாக்கள்  உணவு வழங்கி வருகின்றனர்.  அரசு செய்ய வேண்டிய பணிகளை இவர்கள் செய்து வருவதாக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியின்போது, தாங்கள் இதுபோன்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டது இல்லை என்று  அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

மாநில அரசு செயல்படுகிறதா என்பதே தெரியவில்லை என்று குற்றம் சுமத்தி உள்ள மக்கள், மழை வெள்ளத்தால் நாங்கள்  முடங்கி இருப்பதுபோல மாநில அரசும் முடங்கிவிட்டது போலும் என்றும் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே  மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்ற கூறி மாநிலம் முழுவதும் விவசாயிகள் திரண்டு வந்து மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்தே, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசு விரைந்து உதவி செய்ய வேண்டும் என்றும், மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சியனர் பாஜ அரசுக்கும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.