மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 48ஆயிரம் கனஅடியாக குறைப்பு: கர்நாடக அரசு நடவடிக்கை

சேலம்:

ர்நாடகாவில் தொடர்மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 48,065கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேடடூர்  அணையில் இருந்து நொடிக்கு 46ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதுபோல ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்தும் வினாடிக்கு 50ஆயிரம்  கனஅடியாகக் குறைந்துள்ளது.  ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 18வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 105அடி உயரமுள்ள பவானிசாகர் அணை 96 அடி நிரம்பி உள்ளது. இந்த அணையில் இருந்து  பாசனத்துக்கும் குடிநீர்த் தேவைக்கும் நொடிக்கு 1605 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி முக்கொம்பில் நீர்வரத்து நொடிக்கு 72ஆயிரம் கனஅடியாக உள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு முப்பதாயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் நொடிக்கு 42ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

திருச்சியில் உள்ள 11 கிளைக் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 75 நீர்நிலைகள் நிரப்பப்பட உள்ளன.

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22ம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் 17ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து இன்று காவிரியில் நொடிக்கு ஒன்பதாயிரத்து 512 கனஅடி நீரும், வெண்ணாற்றில் நொடிக்கு ஒன்பதாயிரத்து 29 கனஅடி நீரும், கல்லணைக் கால்வாயில் நொடிக்கு மூவாயிரத்து நான்கு கனஅடி நீரும், கொள்ளிடத்தில் நொடிக்கு எட்டாயிரத்து முப்பது கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

You may have missed