கேரள, கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: வெள்ளத்தால் சூழப்படும் அபாயத்தில் தமிழகம்

சென்னை:

கேரளா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் பெருமளவு திறந்து விடப் பட்டுள்ளது.

இந்த வெள்ள நீர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறு மற்றும் கால்வாய்களில் பெருக்கெடுத்து  ஓடுவதால், தமிழகமும் வெள்ளத்தால் சூழப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக   தமிழகத்திற்கு விநாடிக்கு 2 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணை களில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு விநாடிக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் கன அடி தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. தற்போது, 2 லட்சம் கனஅடி அளவிலாள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தத் தண்ணீர் கர்நாடகா – தமிழ்நாடு எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காவிரியில் வெள்ளம்  சீறி பாய்ந்தோடுகிறது.  காவிரி கரையோர பகுதி வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அங்குள்ள  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக ஒகேனக்கல் சத்திரம், முதலைப் பண்ணை போன்ற பகுதிகளில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஊட்டமலை, ஆலம்பாடி போன்ற காவிரி கரையோரப் பகுதி களில் வசித்த மக்கள் பாதுகப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

ஒகேனக்கல், நாடார்கொட்டாய், நாகர்கோயில், முதலைப் பண்ணை போன்ற பகுதிகளிலும் தடுப்பு அமைத்து காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து வரும் பேய்மழை காரணமாக, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லை பெரி யாறு அணை, இடுக்கி அணை உள்பட பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த தண்ணீர் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்த ஆறுகளி லேயே பாய்ந்தோடுகிறது.

அதே வேளையில் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை, நீலகிரி மாவட்ட அணைகளும் நிரம்பி, தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஈரோடு, பவானி, கோவை,  கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, ஆழியாறு,  வால்பாறை  போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல நெல்லை, குமரி மாவட்டத்திலும் அணைகள் நிரம்பி வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குமரி மாவட்டமும் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், அந்த பகுதிகளில் உள்ள அணைகளும் நிரம்பி உள்ளன. நெல்லை மாவட்டத்தின் வாழ்வாதாரமான  தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே நிலை மேலும் ஒருசில நாட்கள் நீடித்தால், நெல்லை மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் உருவாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால், தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரினால் சூழப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால், தமிழகமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Water opening in Kerala and Karnataka Dams: Tamil Nadu Surrounding also will affect by flood, கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: வெள்ளத்தால் சூழப்படும் அபாயத்தில் தமிழகம், கேரள
-=-