நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்: சுற்றுவட்டார மக்கள் தவிப்பு

சென்னை,

ள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியாகி வருவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக  கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கனமழை காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி முழுவதும் நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முக்கிய உடைமைகளை கையில் எடுத்து கொண்டு பாதுகாப்பை இடத்தை தேடி செல்கின்றனர். மேலும் வீடுகளில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக அதன் சுற்றுவட்டாரப் பகுதி களான  பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் ராம்நகர் தெற்கு விரிவாக்கம், ஸ்ரீநகர், மயிலை பாலாஜி நகர், எல்ஐசி நகர் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழை காரணமாக இந்த ஏரி உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அதன் பிறகும், ஏரி முறையாக தூர்வாரப்படாததும், அங்குள்ள நீர் வழிப்பாதை முறையாக பராமரிக்கப்படாததுமே மீண்டும்  ஏரி நிரம்பியதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் வெள்ளத்தை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் நீர் நிரம்பியிருக்கும் பகுதியையும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளையும் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

You may have missed