சென்னை

சென்னையில் விரைவில் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீர் ஆதாரங்களாக நகரை சுற்றி உள்ள நான்கு ஏரிகள் உள்ளன.   அவை பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் ஆகும்.   இந்த வருடம் பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால் இந்த எரிகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீர் அளவு குறைந்துள்ளது.

சென்ற வருடத்தோடு ஒப்பிடும் போது பூண்டி ஏரியில் 82.46%, சோஷவரத்தில் 89.72% , ரெட் ஹில்ஸ் ஏரியில் 45.44% மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் 96.65% அளவு  குறைந்து காணப்படுகிறது.   இதனால் சென்னை குடிநீர் வாரியம் தற்போது ஒரு நாளைக்கு 65 கோடி லிட்டர் நீர் விநியோகிப்பதை விரைவில் 10 கோடி லிட்டராக குறைக்க உள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.   இந்த வருடம் அதை விட அதிகமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என வாரிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.   இந்த குடிநீர் விநியோகம் குறைவதால் நிலத்தடி நீர் அதிகம் எடுக்கப்படும் எனவும் அதனால் நிலத்தடி நீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை நகரில்  நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் வசிக்கும் அண்ணா நகர், பெசண்ட் நகர், ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகளில் அதிக அளவு நீரை பயன்படுத்துகின்றனர்.   இவர்கள் ஒருவருக்கு 120 லிட்டர் நீர் என்னும் விகிதத்தில் பயன்படுத்துகின்றனர்.   இதில் நிலத்தடி நீரும் அடங்கும்.   அதே நேரத்தில் குறைந்த வருவாய் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒருவருக்கு 50 லிட்டர் நீர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர், “இதற்கு ஒரே வழி மறு சுழற்சி நீர் மட்டுமே ஆகும்.  இதில் கழிப்பறை நீரை உபயோகப்படுத்த முடியாது.    ஆனால் குளிப்பது, கை கழுவுவது, பாத்திரம் கழுவுவது, துணி தோய்ப்பது ஆகிய நீரை மறு சுழற்சி செய்யலாம்.   அடுக்குமாடி கட்டிடங்களில் ஒரு சிறிய மணல் வடிகட்டி மற்றும் தொற்று தடுப்பு சேர்ந்த ஒரு மறுசுழற்சி தொட்டியை அமைக்கலாம்.

இவ்வாறு அமைக்க 1000 லிட்டர் கொண்ட தொட்டிக்கு ரூ. 40000 முதல் ரூ. 80000 வரை செலவாகும்.   இது ஒரு முறை செய்யும் செலவாகும்.   ஆனால் இதன் மூலம் வெகுநாட்களுக்கு நீரை சேமிக்க முடியும்.  இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.