சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ‘சரபங்கா’ திட்டம்! அடிக்கல் நாட்டினார் எடப்பாடி

சேலம்:

ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ‘சரபங்கா’ திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும்  என்று உறுதி அளித்தார்.

மழைக்காலங்களின்போது, மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இத்திட்டத்தினால் சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றிற்கு மேட்டூர் அணை உபரிநீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். இதனால் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 4238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த விழா சேலம் மாவட்டத்தில் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி மேட்டுப்பட்டி ஏரியில் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழுத்தில் பச்சை துண்டு அணிந்து விவசாயி போல் வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் விழாவில் பேசினார்.

அபோது, இன்னும் 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும் என்றும், இந்தத்திட்டத்தினால் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, இப்பகுதிமக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் கூறினார். அப்போது விவசாயிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார், குடிமராமத்து திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டது. திட்டங்களை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு இது அல்ல, எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள் ஆனால் நாங்கள் செயல் வீரர்கள் என்றவர், காவிரி, கோதாவிரி நதிகள் இணைப்பது தொடர்பாக ஆந்திர முதல்வரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேச சென்று உள்ளனர். விரைவில் இந்த திட்டமும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.