முதலில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் ஆபத்துக்கள் பற்றியும் அதிலிருந்து காப்பது குறித்த  டிப்ஸ்களை பற்றியும் பார்ப்போம்.

காரணம்.. கோடை காலம் வந்துவிட்டது, சுட்டிக்குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் ஏறி விளையாடும். அப்போது தவறி தொட்டியில் விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. இது ஆபத்தான நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும்.

காரணம், பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிகம் விரும்புவார்கள்.  அதனால் ஏற்படும்  ஆபத்துகளை அவர்களுக்குத் தெரியாது. ஆகவே பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்து சம்பவங்கள்  அதிகம் நடக்கின்றன.

குறிப்பாக, நகர் பகுதிகளில் வீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவது நடக்கவே செய்கிறது.

இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்று புகுந்துவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இப்படி நுரையீரலுக்குள் நீர் புகுந்துவிட்டால்,  குழந்தையால் சுவாசிக்க முடியாதது. ஆகவே , மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தைக்கு  மயக்கம் ஏற்படும்.

எனவே, நீரில்  விழுந்த குழந்தையை வெளியே எடுத்தது உடனே, சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றை  பரிசோதியுங்கள்.குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளியுங்கள்.

அதாவது, குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்று,  குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக சுவாசிக்க வாய்ப்பு ஏற்படும்.

முதலுதவி

இதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. எனவே உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடுங்கள். இப்போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிக்கும். மேலும், நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறிவிடும்.

இப்போது பெரியவர்களுக்கான முதலுதவியை பார்ப்போம்.

வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரது மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதில் ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும்.

திரைப்படங்களில் தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.  இது மிகப்பெரிய தவறு.

இப்படி வயிற்றை அமுக்குவதால், பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்படும். இது உயிருக்கே கேடாக முடியும்.

முழு மது போதையில் நீச்சல் தொட்டியில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக அப்போது குளியலறைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது. காரணம், வழுக்கிவிடும் தண்மையுள்ள குளியலறையில் தடுமாறி விழுந்து, பின் மண்டையில் அடிபட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

அல்லது அது போன்ற தருணங்களில், மிக நெருங்கியவர், உரிமையுள்ளவர் இருந்தால் குளியலறையை தாழ்போடாமல் குளிக்கவும். ஏதேனும் ஆபத்து என்றால் அவர் வந்து உதவக்கூடும்.

இன்னொரு முக்கிய விசயம்.

தண்ணீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரின் தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.  சுவாசம் இல்லை என்றால்,  நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.

தண்ணீரில் இருந்து அவரை காப்பாற்றி வெளியே  மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது கிடையது.

நீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம்.  மூச்சுத் தடை, இதயம் செயல்படாதது இரண்டுமே தற்காலிகமானவைதான்.

எனவே,  எந்தவிதப் பதற்றமும் கொள்ளாமல் முறையாக முதலுதவி செய்தால், பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை உணருங்கள்.

எனவே நீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து அவசியமாகும்.

முதலுதவிக்குப் பிறகு  உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை  செய்வது  அவசியம்.

சரி இப்போது மீண்டும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு வருவோம்.

பொதுவாக குழந்தைகளை, இந்த தண்ணீர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது எப்படி..

1 குழந்தைகள் உள்ள இல்லங்களில்  குளியல் அறைக் கதவுகளை எப்போதும் தாழ்போட்டு மூடியே வைத்திருங்கள்.

2 சிறிய வாளியில் தண்ணீர் இருந்து அதில்  குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்துதான். ஆகவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.

3 குழந்தைகளைக் குளிக்க வைக்கும்  ‘பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம். அதை எடுப்பதற்காக குழந்தை முயற்சிக்கும்போது, ஆபத்து ஏற்படலாம்

4.       சுற்றுலா செல்லும்போது, ஏரி, குளங்களில் படகில் பயணம் செய்யும்போது நீச்சல் தெரிந்தவர்களும் ‘லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டும்.

5 வலிப்பு நோய் உள்ளவர்கள் தகுந்த பாதுகாவலர்களுடனே  நீர்நிலைகளில் குளிப்பது  அவசியம்.

6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் குதிக்கும்போது எச்சரிக்கை தேவை. அப்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையும் வாய்ப்பு உண்டு.

அப்படி நேர்ந்துவிட்டால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது அவசியம்.

சரி நேயர்களே.. குளியலால்.. குறிப்பாக பாத்டப் குளியல் ஏரி, நீச்சல் குள குளியலின் போது ஏற்படும் ஆபத்துகளையும் அதைத் தவிர்க்கும் முறையையும் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

இந்த ஆலோசனைகளை அவசியம் பின்பற்றுங்கள்.