சென்னையில் உள்ள மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கை மற்றும் கால்களை வீடுகளிலேயே சுத்தம் செய்துவிட்டு வருமாறு மசூதி நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்துவிட்டு தண்ணீரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் கிடைக்காததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

சென்னை நகரில் மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மசூதிகளில் தண்ணீர் பிரச்சினை காணப்படுகிறது. இதன் காரணமாக தொழுகைக்கு வருபவர்கள் முகம், கை, கால்களை வீடுகளில் வைத்து சுத்தம் செய்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழுகைக்கு முன்பு ‘உளு’ செய்ய வேண்டும். தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு ‘உளு’ என்று பெயர். தண்ணீர் பிரச்சினை காரணமாக சில மசூதிகளில் வீடுகளில் வைத்து உடல் உறுப்புகளை சுத்தம் செய்து வருமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மசூதிகளில் கழிவறைகள் எப்போதும் திறந்து இருக்கும். தண்ணீர் பிரச்சினை காரணமாக தொழுகை நடைபெறும் நேரங்களில் மட்டுமே தற்போது கழிவறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன