கொல்கத்தா:
நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரம்மாண்ட ஊர்வலத்தை சங்கொலி முழங்கி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

நேதாஜி பிறந்த நாள் விழா ஊர்வலத்தைத் தொடங்கிவைத்து மம்தா பானர்ஜி கூறியதாவது:

“தேர்தல் வருகிறது என்பதற்காக மட்டுமே நாங்கள் நேதாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அவரது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். நேதாஜியின் 125-வது பிறந்த நாளை இம்முறை நாங்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறோம்.

ரவீந்திரநாத் தாகூர் நேதாஜியை ‘தேஷ்நாயக்’ என்று வர்ணித்தார். அதனால்தான் இந்த நாளை ‘தேஷ்நாயக் திவாஸ்’ என்ற பெயரில் அவரது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தோம். நேதாஜி நாட்டின் மிகப் பெரிய சுதந்திரப் போராளிகளில் ஒருவர். அவர் ஒரு சிறந்த தத்துவவாதி.

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை. அவரது பிறந்த நாளை தேஷ்நாயக் திவாஸ் எனக் கொண்டாட வேண்டும். நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்”.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.