Random image

பலாத்கார குற்றச்சாட்டில்  ஆர் எஸ் எஸ் பிரமுகர் கைது

கொல்கத்தா

மேற்கு வங்க ஆர் எஸ் எஸ் பிரமுகரான அமலேந்து சட்டோபாத்யாய் ஒரு பெண்ணை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில பாஜக பொது செயலராக பணி ஆற்றியவர் அமலேந்து சட்டோபாத்யாய்.   இவர்  ஆர் எஸ் எஸ் அமைப்பில் ஏற்கனவே பல பொறுப்புகள் வகித்தவர் ஆவார்.    இவர் தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் மேற்கு வங்க மாநில நுகர்வாளர் அமைப்பின் பொருப்பாளராக உள்ளார்.

இவர் மீது மேற்கு வங்க பெகலா காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் அமலேந்து சட்டோபாத்யாய் தம்மை திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை காட்டி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் பேச்சை கேட்டு தாம் கருச்சிதைவு செய்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.    இப்போது ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூன்று நாள் கூட்டம் டில்லியில் நடைபெறும் போது இவ்வாறு புகார் எழுந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.   அமலேந்து சட்டோபாத்யாய் மீது பலாத்காரம்,  ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஒரு பெண்ணை கருச்சிதைவு செய்ய தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.    அந்த வழக்கின் அடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.