அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு குறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, “அயோத்தி தீர்ப்பை பொருத்தவரை, சமுதாய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமை, மக்களுடைய நலன், நாட்டினுடைய நலன் இவைகளெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மேல்முறையீடு செய்வோம் என சன்னி வஃக்பு வாரியம் சொல்லியிருக்கிறது. இருப்பினும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லியுள்ளதை வரவேற்கின்றோம்.

எனவே நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த, தேசம் தழுவிய ஒரு பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது என்பது வரவேற்கத்தக்கது. அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக, இந்தியா விளங்குகிறது. இந்தியா ஒரு பன்முக தன்மையுடைய நாடு என்பதை உலக அளவில் நாம் எடுத்துரைப்பதற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மீது மக்கள் காட்டுகின்ற பிரதிபலிப்பு ஒரு சான்றாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.