வட்டியூர்காவு தொகுதியில் இடதுசாரிகள் முன்னணியிடம் தாங்கள் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்வதாக அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து வட்டியூர்காவு தொகுதியில், அப்பகுதி மேயரும், இடதுசாரிகள் முன்னணி வேட்பாளருமான வி.கே பிரசாந்த் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமார், “இந்த முடிவுகள் இடதுசாரி முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் படி இருக்கிறது. மேயர் பிரசாந்த் மழை வெள்ளத்தின் போது மக்களுக்கு கடுமையாக உதவியுள்ளார். எங்களுக்கு இளைஞர்களின் ஆதரவு இருந்ததை தேர்தல் பிரச்சாரத்தின் போது பார்த்தோம். ஆனால் முடிவுகள் எங்களுக்கு எதிராகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் வாக்கு வித்தியாசம் 10,000க்கும் அதிகமாக இருப்பதால் எங்களுடைய தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வட்டியூர்காவு தொகுதியில் இடதுசாரி முன்னணி வேட்பாளர் வி.கே பிரசாந்த் 46,067 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மோகன்குமாரை விட 13,867 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி முன்னணி இத்தொகுதியில் டெப்பாசிட்டை பறிகொடுத்த நிலையில், தற்போது காங்கிரஸிடமிருந்து இத்தொகுதியை பறிக்கும் விதத்தில் கடும் போட்டியை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.