டெல்லி: அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் 16ம் தேதி முதல் துவங்க உள்ளது. அதற்காக ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பாதிப்பு, எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடுவதற்காக மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் கூட்டாட்சி முறையை வெளிப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு முன்மாதிரியாக பணியாற்றி உள்ளது.

உலகின் மிக பெரிய தடுப்பூசி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. 2  தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லா மாநிலங்களிலும் சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 கோடியாக உள்ளது. முதல் கட்டத்தில் இந்த 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டியது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்று பேசினார்.