சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று, எங்களின் ஓய்வை அறிவிப்பதென நானும் தோனியும் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம் என்றுள்ளார் சுரேஷ் ரெய்னா.

மேலும், தங்களுடைய ஜெர்சி எண்கள், முறையே 7 மற்றும் 3 என்பதால், இரண்டையும் சேர்த்தால் 73 வருகிறது. எனவே, நாட்டினுடைய 73வது சுதந்திர தினத்தில் ஓய்வை அறிவிக்க முடிவுசெய்தோம். ஏனெனில் இப்படியான ஒரு சிறப்பான நாள் மீண்டும் கிடைக்காது என்றுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தோனி 2004-ல் வங்கதேசத்துக்கு எதிராக தன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார், நான் 2005-ல் இலங்கைக்கு எதிராக தொடங்கினேன். ஏறக்குறைய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டை ஒன்றாகவே தொடங்கினோம். இப்போது சென்னையில் தொடர்ந்து ஆடுகிறோம். இருவரும் ஒன்றாக இணைந்து ஓய்வு பெற்றுள்ளோம், இருவரும் இணைந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவோம்.

ஓய்வுக்குப் பிறகு இருவரும் நெடுநேரம் கட்டிப்பிடித்து அழுதோம். பிறகு பியூஷ் சாவ்லா, அம்பாதி ராயுடு, கெதார் ஜாதவ், கரன் சர்மா மற்றும் நான் உட்பட உட்கார்ந்து எங்களது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் நட்பு குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது” என்றார் ரெய்னா.