நாங்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்!” எடப்பாடி அணி எம்.எல்.ஏ. வாக்குமூலம்

--

சென்னை:

“ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற வாசகம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே பிரபலமானது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகளே என்று பொருள்படும்படி, மறைந்த காமராஜர் இந்த வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தினார்.

அதாவது “இரு தரப்புமே மோசம்” என்பதை உணர்ததும் உதாரணமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி அணியின் எம்.எல்.வான முருகு மாறன், “அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றுதான்.  நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று பேசினார். அவர் என்ன நினைத்து பேசினாரோ.. கேட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களுக்கு தலை சுற்றியது உண்மை.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், எடப்பாடியையும்,  அவரது அணியினரையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த காட்டுமன்னார்குடி எம்.எல்.ஏ. முருகுமாறன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “யாகராயினும் நாகாக்க என்று அப்போதே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறர். அ.தி.மு.க.வில் உள்ள நாம் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான். நம்முடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். இவர்களில் யாரேனும் தவறு செய்தால் மற்றவர்கள் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அந்த. கருத்தின் ஆழத்தை உண்மைகளை ஆய்வு செய்து நடவடிக்கை.. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது” என்றெல்லாம் பேசிவந்தார்.

இடையில், ““அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றுதான. நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று சீரியஸாக பேசிக்கொண்டே போனார்.

“சரியான வாக்குமூலம்” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி செய்தியாளர்கள் கிளம்பினர்.