மிரன்ஷா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து தாங்கள் போர் செய்து வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் பல தீவிரவாதக் குழுக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.   தாலிபான் உட்பட பல தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் இருந்தே செயல்பட்டு வருவதாக உலக நாடுகள் பல ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.     ஆப்கானிஸ்தான் எல்லைப் புற நகரங்களில் இவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக வெளியான தகவலை ஒட்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தி உள்ளன.

பாகிஸ்தான் எல்லைப்புற நகரமான மிரன்ஷா பகுதி இந்த தாக்குதல்களால் சேதம் அடைந்துள்ளது.   இது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜாவேத் இங்கு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்.  அப்போது அவர், “பாகிஸ்தானில் எந்த ஒரு தீவிர வாதக் குழுவும் தஞ்சம் அடையவில்லை.   என்றுமே பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததில்லை.   தவறான ஊகத்தினால் இந்தப் பகுதியில் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.    அதை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நாங்கள் திவிரவாதிகளுக்கு எதிராக போர் புரிந்து வருகிறோம்.  மிரன்ஷா நகரில் தீவிரவாத மையம் என ஒரு கட்டிடம் உள்ளது.  அதில் நாங்கள் தீவிரவாதிகளைக் கொன்று அவர்களிடம்  இருந்து கைப்பற்றிய பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளோம்.  அத்துடன் தற்கொலைப் படை தீவிரவாதிகள் குறித்த படங்களும் விளக்கங்களும் பார்வைக்கு வைத்துள்ளோம்.

அத்துடன் தாக்குதல்களால் சேதமடைந்த 1300 கடைகள் கொண்ட வர்த்தக மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.  விரைவில் புதிய மருத்துவமனைகள் உட்பட பல மக்கள் நல வசதிகள் கட்டித் தரப்பட உள்ளன.   தாக்குதலுக்கு பயந்து வெளியேறிய மக்களை விரைவில் இங்கு குடியமர்த்த உள்ளோம். ” என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த அதே நேரத்தில் மிரன்ஷா நகரில் இருந்து சுமார் 14 கிமீ தூரத்தில் அங்கு வசிக்கும் மக்கள் ராணுவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி உள்ளனர்.   தங்களை குறி வைத்து ராணுவம் தாக்கியதாக குறை கூறும் அவர்களை சந்திக்க விரும்பிய பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.