மகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது :  சிவசேனா

 

மும்பை

முந்தைய தேர்தலை விடக் குறைவான தொகுதிகளில் வெற்றி எற்ற போதிலும் அரசை இயக்கும் ரிமோட் கண்டிரோல் தங்களிடம் உள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 21-ந் தேதி 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 145 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் நிலையில் ஆளும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றுள்ளது.

இக்கூட்டணியில் 164 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், தேவேந்திர பட்னாவிஸ்தான் மறுபடியும் முதல்வர் ஆவார் என்றும் பாரதிய ஜனதா தேர்தலுக்கு முன்பே அறிவித்தது. ஆகவே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

அதே வேளையில் முதல்வர் பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் அமைச்சர் பதவிகளையும் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது.  சிவசேனா சார்பில் மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்யா தாக்கரேவை முதல்-மந்திரியாக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

இந்நிலையில் சிவசேனாவின் கட்சி அதிகாரபூர்வ நாளேடான சாமனா  பத்திரிகையில் அக்கட்சித் தலைவர் சஞ்சய் ரவுத் எழுதி வரும் தொடரில், ”சென்ற 2014 ஆம் ஆண்டு 63 தொகுதிகளில் வென்ற சிவசேனா தற்போது 56 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.  இது அளவில் குறைவு என்றாலும் ஆட்சியை நடத்தும் ரிமோட் கண்டிரோல் சிவசேனாவிடம் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ரவுத் தனது டிவிட்டரில் சிவசேனையின் சின்னமான புலி பாஜகவின் சின்னமான தாமரையைக் கையில் பிடித்தபடி உள்ள கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தார்.  அந்த புலியின் கழுத்தில் கடிகாரத்துடன் உள்ள ஒரு சங்கிலி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   கடிகாரச் சின்னம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பதும்  கைச்சின்னம் காங்கிரஸ் கட்சியின் சின்னம்  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

கார்ட்டூன் கேலரி