கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் காணப்படுகிறது.   இதுவரை தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  ஆயினும் இதை விட அதிகம் பேர் பாதித்து இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.  நேற்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த விவரம் வருமாறு :

வழக்கமான ஃப்ளூ ஜுரத்துக்கும் கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் தென்படும் என்பது உண்மைதான்.  எனவே நாங்கள் முதலில் ஜுரம், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் சோதனை செய்துக் கொள்ள வேண்டும்  என அறிவித்து இருந்தோம். ஆனால் சனிக்கிழமை இரவு முதல் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா ஆகியவை இருந்தாலே சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களிடையே கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும்.  தற்போது சோதனை உபகரணங்கள் மற்றும் தனிமை வார்டுகளுக்கு தட்டுப்பாடு இல்லை.  தற்போது மத்திய அரசு அமைத்துள்ள அனைத்து உபகரணங்கள் கொண்ட 8 சோதனை நிலையங்களில் இலவச் சோதனை செய்துக் கொள்ள முடியும்.

இந்தியாவில் இன்னும் 2 மாதங்களில் தற்போதுள்ள சூழல் மேலும் மோசமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   இது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.  அதைச் சமாளிக்க நாம் தயாராகி வருகிறோம்.  நாம் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி குளோரோகுவின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம்.  நல்ல பலன்களை அளிக்கும் இந்த மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. உலகெங்கும் கிராக்கி உள்ள இந்த மருந்துகள் நம்மிடம் 1.5 லட்சம் நோயாளிகளுக்கு அளிக்கும் அளவுக்கு உள்ளது.

தற்போது 1690 தனிமை வார்ட் வசதிகள் உள்ளன  அடுத்த வாரத்தில் மேலும் 1000 அமைக்கப்படும்.  நம்மிடம் மூன்றடுக்கு முக கவசங்கள் 40 லட்சமும், என் 95 கவசங்கள் 2 லட்சமும், ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு பொருட்களுமுள்ளன.  எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்குச் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்படுகிறது.   அத்துடன் புதியதாக 500 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், மற்றும் 1500 சோதனை சாலை ஊழியர்கள் விரைவில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.   இதுவரை 10000 கட்டில்களும் படுக்கைகளும் வாங்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் திறக்கப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் தனிமை வார்டுகள் அமைக்க வசதிகள் உள்ளன.  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 அடுக்கு மூன்றாம் டவர் தனிமை கூடத்துகளுக்காக மட்டும் என அறிவிக்கப்பட உள்ளது.  ஏற்கனவே உள்ள பல வார்டுகள் தனிமை வார்டுகள் ஆக மாற்றப்பட உள்ளன. தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் உதவிக்காக இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

தற்போதுள்ள நிலையில் மற்ற நாடுகள் சென்று வரும் பயணிகள் ஒத்துழைக்காதது வருத்தத்தை அளிக்கிறது.   அவர்கள் தனிமைப்படுத்துவதை விரும்பாமல் நமது அடிப்படை அறிவுரைகளையும் பின்பற்றாமல் இருக்கின்றனர்.  இப்போது நம்முடன் தனிமையில் உள்ள 4250 பேர் மொபைல் ஆப் மூலம் தொடர்பில் உள்ளனர்.   தனிமை கூடத்துகளில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கை 1160 இல் இருந்து 5800 ஆக்கி உள்ளோம்.  இப்போது 32 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.   ஒரு சில பயணிகள் பொதுச் சுகாதார விதிகளின் படி வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக முத்திரை இடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று நாங்கள் முக்கிய மருத்துவமனை நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினோம்.  அவர்கள் ஒவ்வொரு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தனிமை வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.  இதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ள உள்ளது.

மாநில எல்லைகளை தற்போது மூடி உள்ளோம்.  மாநிலங்களுக்கு இடையில் ஆன ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவுதலைத் தடுக்க மாநிலத்தை முழுவதுமாக மூடி வைப்பது என்பது நல்ல தீர்வு ஆகும்.   ஆனால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களைப் பெறுவதும் முக்கியமானதாகும்.  எனவே இந்த முழு அடைப்பு என்பது படிப்படியாக நடக்க வேண்டும்.   நான் மாநிலத்தில் முழு அடைப்பு நடத்துவதை  விரும்புகிறேன்.  உலகம் முழுவதும் உள்ள தற்போதைய நிலையை நினைத்து மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நான் இது குறித்த விவரங்களை உடனடியாக டிவிட்டரில் பதிவிட்டு வருகிறேன். ஆனால் பலர் உறுதி செய்யப்படாத தகவல்களை அளித்து பீதியை உருவாக்குகின்றனர்.   தற்போது பலருடைய உயிருக்கு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதுவரை ரயில் மூலம் டில்லியில் இருந்து சென்னை வந்த ஒரு கொரோன்னா நோயாளியைக் குறித்து இன்னும் தெரியாத நிலை உள்ளது.   அவருடன் பயணம் செய்த 193 பேரை கண்டு பிடித்துள்ளோம்.  அவர்களுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் இந்த ஒருவரை வைத்து வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியவில்லை என சொல்லக் கூடாது.

நாங்கள் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையை குறைத்துச் சொல்வதாகக் கூறுவது அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும்.  நாங்கள் இப்போது வெளிப்படையான முறையில் அனைத்து தகவல்களையும் அனைத்து விவரங்களையும் அறிவித்து வருகிறோம்.   இது மக்களிடையே பீதியை உருவாக்கும் என்றாலும் நாங்கள் அதை மறைப்பதில்லிஅ.  கோவிட் 19 குறித்த எந்த ஒரு தகவலையும் மறைக்க மாட்டோம்.  நாங்கள் எந்த ஒரு உண்மையையும் அறிவிக்கத் தயங்க மாட்டோம்.  அப்போதுதான் மக்களுடைய முழு ஒத்துழைப்பைப் பெற முடியும்

என விஜயபாஸ்கர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.