தஞ்சாவூர்,

திராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு ஆய்வு செய்யத்தான் திமுக ஆட்சியின்போது அனுமதி கொடுத்தோம், ஆனால் குத்தகைக்கு கொடுத்து அதிமுக அரசுதான் என்று ஸ்டாலின் கூறி யுள்ளார்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேராட்டக்காரர்கள் மத்தியில் பேசியதாவது.

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி பிரச்சினை குறிதது சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம் அதனை உடனடியாக எடுக்காமல், பல முறை அழுத்தம் கொடுத்த பிறகு எடுத்தார்கள்.

அப்போது எம்எல்ஏ செழியன் இந்த பிரச்னைகள் குறித்து எடுத்துச் சொல்லியுள்ளார். நானும் செல்லியிருக்கிறேன், குத்தகை உரிமையை அதிமுக வழங்கும் முன் இந்தப் பகுதி மக்களின் கருத்துகளையும் விவசாயிகளின் ஆலோசனையையும் கேட்டிருக்க வேண்டும்.

அதன் பின்னர் குத்தகை அளித்திருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்யவில்லை. அதிமுக ஆட்சியில்தான் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு குத்தகை உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் குழாய் வெடித்து விவசாய நிலங்கள் அழியும் நிலைக்கு வந்துள்ளன. இதனைக் கண்டித்து 19.5.2017 முதல் நீங்கள் போராடி வருகிறார்கள். ஆனால் ஆளும் கட்சி காவல்துறையை வைத்து அடக்குமுறை செய்திருக்கிறது. தங்களின் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பலரும் போராடி வருகின்றனர்.

அதிமுக அரசு இந்தச்சூழலை எப்படி கையாண்டிருக்க வேண்டும், முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும் அல்லது அமைச்சர்கள் வந்து பேசி இருக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற டெல்லியில் அய்யாகண்ணு தலைமை யிலான போராட்டத்தில் அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.

பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்தியிருக்க வேண்டும்.

“ஜி.எஸ்.டி, நீட், உணவு பாதுகாப்பு மசோதா என மத்திய அரசின் திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.

இன்று அவரின் பெயரால் ஆட்சி நடத்தும் இவர்கள் அந்த திட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தை நடத்த எல்லோருக்கும் உரிமை உள்ளது. கதிராமங்கலம் திட்டம் திமுக காலத்தில் போடப்பட்டதாகச் சொல்கிறார்கள், திமுகவின் எத்தனையோ திட்டங்களை முடக்கிய அதிமுக இந்த திட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கலாமே.

திமுக ஆட்சியில் கதிராமங்கலத்தில் ஆய்வு செய்யதான் அனுமதி அளித்தோம், அதிமுகதான் ஓஎன்ஜிசிக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

மத்திய அரசு சொல்வதை அப்படியே அடிபணிந்து ஏற்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது, அதனால் தான் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள்.

இதற்கு மேலும், நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று கூறினால், நாங்கள் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை முடக்கிய அ.தி.மு.க, மக்களுக்கு எதிரான இந்த திட்டத்தை என் தடுக்கவில்லை.

மக்களுக்கு எதிரானது என்றால் தி.மு.க கொண்டு வந்திருந்தாலும் அதனை ரத்து செய்திருக்க வேண்டும்.

நாங்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் தருவதில்லை. ஆனால் அவர் நடிகைகளை சந்திக்கிறார்.

அ.தி.மு.க ஆட்சி அகற்றபட வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வரும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் ” என்றார்.

நிச்சயம் கதிராமங்கலம் மக்களின் போராட்டம் ஓரிரு நாளில் வெற்றி பெறும். கைது செய்து சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.