சென்னை:

சந்திரயான்-2 திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து பெருமைப்படுகிறோம் என்று திமுக தலைவர், ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்க ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி என்றும் கூறி  உள்ளார்.

சந்திரன் குறித்து ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, முதன்முதலாக நிலவின் தென்துருவப் பகுதிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த ஆய்வுப்பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இருந்தாலும் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் பகுதி மட்டுமே தொடர்பு இழந்துள்ள நிலையில், ஆர்பிட்டர் மூலம் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இஸ்ரோவின் சாதனையை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட  அரசியல் கட்சித்தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   “கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்கவும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்துப் பெருமை கொள்கிறோம்”, என  கூறி உள்ளார்.