டில்லி

யோத்தி பாபர் மசூதி – ராம் மந்திர் நில விவகாரத்தில் இந்துக்களுடன்  இணைந்து செயல்படத் தயார் என இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக  வெகு நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்தது.   கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இந்த மசூதி கர சேவகர்களால் இடித்து நொறுக்கப்பட்டு அங்கு ராமர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   அதையொட்டி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இந்த மசூதி இருந்த நிலம் குறித்த வழக்கு நடந்து வருகிறது.   தற்போது இந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.

இன்று விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமியர் தரப்பு சார்பில்  அவர்கள் வழக்கரிஞர் ராஜீவ் தவான், “இந்துக்களுடன் இணைந்து செயல்பட இஸ்லாமியர்கள் தயாராக உள்ளனர்.   ஆனால் அந்த நிலம் இஸ்லாமியர்களுடையது.  எனவே நிலத்தின் உரிமை இஸ்லாமியர்களுடைய சன்னி வக்ஃப் வாரியத்திடம் இருக்க வேண்டும்.   இந்துக்கள் அந்த வளாகத்தில் வந்து ராமரை துதிக்கலாம்” என அறிவித்தார்.

அத்துடன் அவர், “மசூதியின் வெளிப்புறத்தில் முதலில் ராமர் சிலை  அமைக்கப்பட்டு அங்குப் பூஜைகள் நடந்துள்ளன என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.  ஆனால் கடந்த 1949 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று வெளியில் இருந்த ராமர் சிலை மசூதியின் நடுவில் வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.   எனவே முன்ப் இருந்த படி மசூதியின் வெளிப்புற பகுதியில் மீண்டும் ராமர் சிலை அமைத்து பூஜை நடத்தலாம்.   ஆனால் நிலத்தின் உரிமையை அளிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரின் அமர்வு வினாக்களை எழுப்பி உள்ளது.  இதற்கு முன்பு அகாரா தரப்பில் சிலை இருந்ததால் தங்களுக்கு அந்த இடத்தில் உரிமை உண்டு என வாதிட்டதைச் சுட்டிக் காட்டிய அமர்வு வெளிப்புறத்தில் சிலை இருந்தது என ஒப்புக் கொண்ட தவான் அந்த வெளிபுறப் பகுதியில் அகாராவுக்கு உரிமை உள்ளதா எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

இதற்கு தவான், “சிலை அங்கிருந்தது உண்மைதான், நாங்கள் அங்கு சிலை  இல்லை எனக் கூறவில்லை.  ஆனால் 1985 ஆம் வருடம் ரகுவர் தாஸ் தொடர்ந்த வழக்கில் இந்துக்களுக்கு அங்குப் பூஜை நடத்த உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளதே தவிர அந்த இடம் இந்துக்களுடையது எனத் தீர்ப்பு அளிக்கவில்லை.   எனவே அந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் பூஜை நடத்தலாமே த்விர இடத்துக்கு உரிமை கொண்டாட முடியாது” என பதில் அளித்தார்.

அதற்கு நீதிபதி நசீர், “இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியுமா?  இந்தியாவில் உள்ள இஸ்லாமியச் சட்டத்தில் சுஃபியிஸம் இடம்  பெற்றுள்ளதா?” எனக் கேட்டார்.

தவான், “குரான் சட்டம் என்பதே சரியான சட்டமாகும். ஆனால் உச்சநீதிமன்றம் குரான் சட்டத்தை தற்போதைய ந்வீன நிலைக்கு ஏற்ப மாற்ற முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” எனப் பதில் அளித்தார்.

அதற்கு நீதிபதி சந்திரசூட், “எனவே நீங்கள் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தின்  முழு உரிமையும் கோராமல் இந்துக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்ய ஒப்புக் கொள்கிறீர்களா? “ என்னும் வினாவுடன் வழக்கை முடித்து வைத்தார்.