பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்: உச்சநீதி மன்றத்தில் கபில்சிபல் வாதம்

காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல்

டில்லி:

ர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சட்டமன்றத்தில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, பாஜ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்ரோத்தகி, மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது கட்சி நாளையே  பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறது,எங்களுக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும்  என்று கூறினர்.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இன்று காலை 10 45 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள கடிதங்களை முகுல்ரோத்தகி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள்  கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

முகுல் ரோத்தஹி தாக்கல் செய்த கடிதங்களில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது யார் என்பது குறித்த எந்தவித பெயரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரசாரமாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன என்று கூறிய நீதிபதி சிக்ரி . நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என கூறினார்.

அப்போது  காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில்சிபல்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார் என்று கூறினார்.

மேலும்,  நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். காலதாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும்   எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என  காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.