வாஷிங்டன்

கொரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா மொத்தமாகத் துண்டித்துள்ளதாக  அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி உள்ளது.  இதில் அமெரிக்கா கடுமையான அளவில் பாதிக்கபட்டுள்ள்து.   இந்த வைரஸ் தாக்குதல் குறித்துச் சரியான நேரத்தில் உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை அளிக்காமல் சீனாவுக்கு ஆதரவாக இருந்ததால் உலகெங்கும் கொரோனா பரவியதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப்  ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

அத்துடன் உலக சுகாதார மையத்துக்கு  அமெரிக்கா வழங்கி வந்த நிதியை உடனடியாக நிறுத்த போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.  ஆயினும் அவருக்கு உலக சுகாதார மையம் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது.  நேற்று அமெரிக்க அதிபர்  டிரம்ப்  அதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.

நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் , “இந்த மாத தொடக்கத்தில் கொரோனா குறித்த சீர்திருத்தங்களை அறிவிக்குமாறு நான் உலக சுகாதார மையத்தை கேட்டுக் கொண்டேன்.  ஆனால் அதை மையம் ஏற்க மறுத்துவிட்டது.  இதற்குக் காரணம் அந்த அமைப்பில் உள்ள சீன அதிகாரிகள் ஆவார்கள்.  அவர்கள் சொற்படி மட்டுமே அமைப்பு நடக்கிறது.

நாங்கள் இந்த மையத்துக்கு வருடத்துக்கு  சுமார் 45 கோடி அளித்து வருகிறோம்.  ஆனால் சீனா வருடத்துக்கு வெறும் 4 கோடி டாலர்கள் மட்டும் அளித்து விட்டு முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டுள்ளது.  நாங்கள் கொரோனா குறித்துக் கேட்ட விளக்கமான சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கையை மையம் கண்டுக் கொள்ளவில்லை.

உலக சுகாதார மையம் தற்போது சீனாவின் கைப்பாவையாகச் செயல்பட்டு கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து தவறான பாதையைக் காட்டி வருகிறது.  எனவே நாங்கள் இன்றுடன் உலக சுகாதார மையத்துடனான உறவை மொத்தமாகத் துண்டித்துக் கொள்கிறோம்.  இந்த மையத்துக்கு அளிக்க உள்ள நிதி உதவியை வேறு சர்வதேச சுகாதார அமைப்புக்கு அளிக்க உள்ளோம்” என அறிவித்தார்.