சென்னை:

மிழக அரசையும், மத்திய அரசையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள் நாங்கள் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 40 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்  என்று அமமுக தலைவர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள டிடிவி தினகரன் இன்று திருவள்ளுர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அமமுகவை சுயேட்சை எனக்கூறி சின்னம் கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறியவர்,  உலகெங் கிலும் உள்ள தமிழ் மக்கள் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா என எதிர்பார்த்தனர். ஆனால், தேர்தல் ஆணையம்  எங்களை தன்னிச்சையான அமைப்பு என்று கூறி சின்னம் தர மறுக்கிறார்கள்…  குக்கர் சின்னத்தை தராவிட்டாலும், எந்த சின்னம் கொடுத்தாலும், தமிழக மக்கள் அமமுகவை ஜெயிக்க வைப்பார்கள். சின்னம் முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம் என்றார்.

தமிழகத்தில் மக்களே விரும்பாத அதிமுக ஆட்சி தொடர்கிறது… இதற்கு காரணம் மோடி என்று குற்றம் சாட்டியவர்,  ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி அவர்களின் கூட்டணி கட்சியான பாமக ஸ்டைலில் கூற வேண்டுமானால், இது ‘மானங்கெட்ட கூட்டணி’ என்று கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத தமிழக அரசையும், மத்திய  அரசையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள்  நாங்கள்…  என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், தனது பிரசாரத்தின்போது, தனக்கு வரவேற்பு கொடுப்பது, பொன்னாடை, பூங்கொத்து தருவது, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.