’’நாங்க தான் ராஜஸ்தானில் கிங் மேக்கர்ஸ்’’

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கட்சிக்குள் கலகம் செய்த சச்சின் பைலட், துணை முதல்-அமைச்சர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஆதரவும், வாக்கும் ’கோடி பொன் பெரும்.’’

இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபையில்  2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாரதிய பழங்குடியினர் கட்சி ( பி.டி.பி) முதல் –அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு, தங்கள் ஆதரவை  தெரிவித்துள்ளது.

அசோக் கெலாட்டுக்கும், சச்சினுக்கும் மோதல் உருவானபோது, ‘’ எங்கள் கட்சி  நடுநிலை வகிக்கும். நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம்’’ என்று அந்த கட்சி அறிவித்தது.

ராஜ்குமார் என்ற அந்த கட்சியின் எம்.எல்.ஏ.’’ என்னை ராஜஸ்தான் போலீசார் கடத்தினர். கார் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு மிரட்டினர்’’ எனப் பேட்டி அளிக்க, அதை சச்சின் ஆட்கள்  சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த நிலையில் தங்கள் நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டு, பி.டி.பி. கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ராஜ்குமாரும், ராம்பிரசாத்தும்’’ அசோக் கெலாட்டுக்கே எங்கள் முழு ஆதரவு ‘’ எனத் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்சியின் தலைவரான மகேஷ்பாய் வசாபாய்’’ எங்கள் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் நாங்கள் தான் ராஜஸ்தானில் ’’கிங் மேக்கர்ஸ்’’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ..ஆரம்பிச்சுட்டாங்க..

-பா.பாரதி.