நாங்கள் தான் அண்ணா, எம் ஜி ஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள் : எடப்பாடி பழனிச்சாமி

சேலம்

முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

நாடெங்கும் நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.  அத்துடன் நேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டதால் பெண்குழந்தைகளுக்கான பல நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.  நேற்று இரவு சேலத்தில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்டு அவர் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “அதிமுக என்பது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த இயக்கம்.  இதன் தலைவர்கள் மக்களுக்குப் பல நலத்திட்டங்களை அளித்துள்ளனர்.  அண்ணாவின் கனவை எம் ஜி ஆர் நிறைவேற்றினார்.   அண்ணா மற்றும் எம் ஜி ஆர் ஆகிய இருவருடைய கனவையும் ஜெயலலிதா நிறைவேற்றினார்.

எனது அரசு ஜெயலலிதாவின் வழியில் அவர் விரும்பிய நலத் திட்டங்களை நடத்தி வருகிறது.

அண்ணா, எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை எனத் தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம்.  அதிமுக தொண்டர்களாகிய நாம்தான் அவர்களுடைய உண்மையான வாரிசுகள்.    நாம் அனைவரும் அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

தமிழகம் எங்கும் நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை அவர் படத்துக்கு மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் அதிமுகவினர் கொண்டாடினார்கள்.  ஆர் கே நகரில் நடந்த பேரணியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகளை அளித்தார். அவர் தனது உரையில் எம் ஜி ஆர் காலத்தில் கட்சியின் உறுப்பினர்கள் 18 லட்சமாக இருந்ததாகவும் அதை ஜெயலலிதா 28 வருடங்களில் 1.5 கோடியாக உயர்த்தியதாகவும் குறிப்பிட்டார்.