புதுடெல்லி:  தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வெட்கப்படவேண்டும் என்று நிர்பயாவின் தந்தை 18ம் தேதியன்று தெரிவித்தார். மேலும், அவரது குடும்பம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் போல ‘‘பரந்த மனதுடையவர்கள்“ இல்லை என்றும் கூறினார்.

அவர் மேலும், மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் ஜெய்சிங் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறினார்.

17 ஜனவரி அன்று ஜெய்சிங் ஒரு ட்வீட்டில், நிர்பயாவின் தாயாரின் வலியை முழுமையாக உணர முடிகிறத அதே வேளையில், “நளினியை மன்னித்து அவரை மரண தண்டனையிலிருந்து விடுவித்த சோனியா காந்தியின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு“கேட்டுக்கொண்டார்.  அவர் மேலும் கூறியதாவது: “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், ஆனால் மரண தண்டனைக்கு ஆதரவாக அல்ல. “

ஆனால் நிர்பயாவின் தந்தை, “நாங்கள் ஏழு ஆண்டுகளாக நீதி வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம்.  நாங்கள் சாதாரண பொதுமக்கள் தான், அரசியல்வாதிகள் அல்ல. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இத்தகைய கருத்தினை வெளிப்படுத்தியதற்கு வெட்கப்பட வேண்டும், அவர் நிர்பயாவின் தாயாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும்“, என்றும் கூறினார்.

மேலும் அவர், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு ஜெய்சிங் போன்றோரின் மனநிலையும் ஒரு காரணம் என்று கூறினார்.

மரண தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்த்தையடுத்து, பிப்ரவரி 1ம் தேதி, நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிர்பயாவின் தந்தை, “இறுதியாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்“, என்று தெரிவித்தார்.