கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்காலாந்து பிரச்னை தலை விரித்தாடுகிறது. இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சியான கூர்கா ஜன்முகி மோர்ச்சா கட்சியின் (ஜிஜேஎம்) ஆதரவாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதால் பாஜ இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கிறது. பாஜ தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளர் மெலாய் தே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சியான ஜிஜேஎம் மூலம் பாஜ.வுக்கு ஒரு புறம் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் மேற்கு வங்க மாநிலத்தை பிரிப்பதற்கு ஆதரவு அளித்தால் மாநிலத்தில் பாஜ செல்வாக்கு சரிவை சந்திக்கும் என்பதால் தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ‘‘கூர்காலாந்து பிரச்னைக்கு நாடாளுமன்றம் மூலம் மத்திய அரசு தீர்வு காண முடியும். ஆனால் அவர்களுக்கு இதில் விருப்பமில்லை. கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று ஜிஜேம் எம்.எல்.ஏ அமர்சிங் ராய் மோடி அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜ தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா கூறுகையில், ‘‘நாங்கள் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே ஜிஜேஎம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். அவர்களது கூர்காலாந்து கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் தனி கொள்கைகளை கொண்ட தனிக் கட்சி. கூர்க்காக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டியது முதல்வர் மம்தா பானர்ஜியின் பொறுப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘கூர்காலாந்து விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிஜேஎம் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பியுள்ளது’’ என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டார்ஜிலிங் மலைப் பகுதியில் உள்ள பாஜ தலைவர்கள் கூர்காலாந்துக்கு ஆதரவாக உள்ளனர். எனினும் ஜிஜேஎம் கட்சி, கூர்காலாந்துக்கு என்று தனி நிர்வாக அமைப்பை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று இதர கூர்கா கட்சிகளும் நினைக்கின்றன.

ஜன் அண்டோலன் கட்சி தலைவர் ஹர்கா பகதூர் சேட்ரி கூறுகையில், ‘‘வன்முறையில்லாத வகையில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஜிஜேஎம் போராட்டம் நடத்தினால் அதில் நாங்களும் இணைந்து கொள்வோம். இது குறித்து அக்கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். ஆனால் அந்த கட்சியினர் இது வரை இதற்கு முன்வரவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தனி மாநிலத்திற்கு அனுமதி வழங்குவது மாநில அரசின் கையில் இல்லை. இது மத்திய அரசின் பணி. அதனால் ஜிஜேஎம் கட்சியினர் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சரியான பாதையில் அவர்கள் பயணிக்கவில்லை’’ என்றார்.

டார்ஜிலிங்கில் ஏற்பட்டுள்ள வன்முறையால் மேற்கு வங்க மாநிலத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த பாஜக.வுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் மத்தியில் வெவ்வேறு எண்ணங்கள் நிலவுகிறது.

இதில் மத்திய தலைவர்களுக்கு பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிறு மாநில கொள்கைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் பாஜ தெரிவித்திருந்தது. ஆனால் அதை தற்போது பின்பற்ற தயங்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.